NATIONAL

அந்த 500,000 வெள்ளி எங்களுடையது- உரிமை கோருகிறது தனியார் நிறுவனம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22- இங்குள்ள  பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் 500,000 வெள்ளி ரொக்கத்துடன் கைவிடப்பட்ட பயணப் பெட்டி தங்களுடையது என்று நிறுவனம் ஒன்று உரிமை கோரியுள்ளதைச் சிலாங்கூர் மாநில காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஷா ஆலமில் செய்துள்ள புகாரை தாங்கள் பெற்றுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த பணம் தங்களுடையது என்ற ஒரு நிறுவனத்தின் புகாரை காவல் துறை பெற்றுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பணம் உண்மையிலே அந்த நிறுவனத்திற்குச்  சொந்தமானதா என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஐந்து லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட  தொகை அடங்கிய பயணப்பெட்டியை அந்த பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் பாதுகாவலர ஒருவர் கண்டு போலீசாருக்கு புகார் அளித்ததாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான அந்த பயணப் பெட்டியை 30 வயது மதிக்கத்தக்க பாதுகாவலர் நேற்று காலை 8.00 மணியளவில் கண்டதாக ஹூசேன் நேற்று கூறியிருந்தார்.

அந்த பயணப் பெட்டியை சோதனையிட்ட போது அதில் 50 மற்றும் 100 வெள்ளி நோட்டுகள் அடங்கிய ஐந்து லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :