ANTARABANGSA

மனிதருக்குப் பன்றியின் சிறுநீரகம்- அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பொருத்தினர்

போஸ்டன், மார்ச் 22- இறுதிக் கட்ட சிறுநீரகப் பாதிப்பை எதிர்நோக்கியிருந்த
62 வயது நபர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பெறும்
முதல் மனிதர் என போஸ்டனில் உள்ள மஸ்ஸாசூசெட்ஸ் பொது
மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நான்கு மணி நேர அறுவை சிகிச்சை இம்மாதம் 16ஆம் தேதி
மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய மருத்துவர்கள், நோயாளிகளுக்குத் தயார்
நிலை உடல் உறுப்புகளை வழங்கும் முயற்சியில் இதுவொரு மகத்தான
மைல்கல் என வருணித்தனர்.

ரிச்சர் ஸ்லெய்மென் என்ற அந்த நோயாளி நன்கு குணமடைந்து
வருவதாகவும் விரைவில் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்றும்
மருத்துவமனை அறிக்கை ஒன்றில் கூறியது.

மிருக அவயத்தை மனிதருக்கு பொருத்தும் இந்த முன்னுதாரண அறுவைசிகிச்சையின் நீண்ட கால விளைவுகளை கண்டறிய நிபுணர்கள் ஆர்வமுடன் உள்ளதாகச் சிறுநீரக மற்றும் கணய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜிம் கிம் தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகளாக டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு
சிகிச்சையைப் பெற்று வந்த ரிட்டர்ட் ஸ்லெய்மெனுக்கு கடந்த 2018ஆம்
ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும்
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் அந்த சிறுநீரகமும் செயலிழந்ததைத்
தொடர்ந்து அவருக்கு மீண்டும் டயாலிசிஸ் சிகிச்சை தொடரப்பட்டது.

அந்த பன்றியின் சிறுநீரகம் மஸ்ஸாசூசெட்ஸில் உள்ள இஜெனசிஸ் ஆப்
கேம்ப்ரிட்ஜ் மையத்திலிருந்து பெறப்பட்டது. சிறுநீரகத்தைப் பெறும்
மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஜீன்களை அகற்றுவதற்கு
ஏதுவாக அந்த பன்றி மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களையும்
அந்நிறுவனம் பன்றியிலிருந்து அகற்றியது.


Pengarang :