NATIONAL

டோல் கட்டணத்தை ரத்து செய்வதால் அரசுக்குக் கணிசமான நிதி விளைவுகள் ஏற்படும் – அமைச்சர் கூறுகிறார்

கோலாலம்பூர், மார்ச் 22- டோல் கட்டண முறையை ரத்து செய்வது
நாட்டின் நிதி நிலைமையில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் அத்திட்டத்தை அமல் செய்வது கடினமான ஒன்றாகும் என்று
பொதுப்பணித் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான்
கூறினார்.

நாட்டில் டோல் கட்டண முறையை ரத்து செய்யும் பரிந்துரையை அமல்
செய்யும் பட்சத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு 45,000 கோடி
வெள்ளி வரை இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு
ஏற்படும் என்று அவர் சொன்னார்.

டோல் கட்டண முறையை ரத்து செய்யும் பட்சத்தில் நெடுஞ்சாலை
ஒப்பந்த நிறுவனங்களுக்கு 40,000 கோடி வெள்ளி வரை இழப்பீடு வழங்க
வேண்டும் என கடந்த 2019ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டது. தற்போது இந்த
இழப்பீட்டின் மதிப்பு இன்னும் உயர்ந்து 45,000 கோடி வெள்ளியாக
ஆகியிருக்கும் என்றார் அவர்.

நாட்டின் வருடாந்திர வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) 38,800 கோடி
வெள்ளியை உள்ளடக்கியது என்பது நாம் அறிந்ததே. 45,000 கோடி வெள்ளி
மதிப்பிலான டோல் கட்டண முறையை ஓராண்டு காலத்தில் நாம் ரத்து
செய்தால் சம்பளம் வழங்குவதற்கும் இதர தேவைகளுக்கும் செலவிட
நம்மிடம் பணம் இருக்காது. ஆகவே, டோல் கட்டணம் ரத்து செய்யப்படும்
என நான் கருதவில்லை என்று சொன்னார்.

மக்களவையில் நேற்று 2023ஆம் ஆண்டிற்கான மலேசிய நெடுஞ்சாலை
வாரியத்தின் (ஒருங்கிணைக்கப்பட்ட)(திருத்தப்பட்ட) மசோதா மீதான
விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத்
தெரிவித்தார்.

பெருநாள் காலங்களில் இலவச டோல் கட்டணச் சலுகையை வழங்கும்
நடைமுறை காரணமாக அரசாங்கம் நாளொன்றுக்கு 2 கோடி வெள்ளியை
நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குகிறது என்றத்
தகவலையும் அகமது மஸ்லான் வெளியிட்டார்.

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போதும்
இலவச டோல் கட்டணச் சலுகையை அரசாங்கம் வழங்குவதற்குரிய
சாத்தியம் உள்ளதையும் அவர் கோடி காட்டினார்.


Pengarang :