NATIONAL

காஸாவில் விமானம் மூலம் மனிதாபிமான உதவிகள்- மலேசியா திட்டம்

கோலாலம்பூர், மார்ச் 22 – காஸாவிற்கு விமானம் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியத்தை மலேசியா நிராகரிக்கவில்லை.

உதவிகளை வழங்குவதற்கான சிறந்த மாற்று வழியை அரசாங்கம் ஆலோசித்து வருவதாக  பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

விமானம்  மூலம் மனிதாபிமான உதவிகளை நாம்  வழங்குவதாக இருந்தால்  பொருட்களை அனுப்பலாம். நமது விமானங்கள் மூலம் அல்லாமல்  உதவிகளைப் பெறும்   தரப்பினரை அவ்வாறு  செய்ய அனுமதிக்கலாம் என்று அவர் சொன்னார்.

இலக்கை அடையும் வரையில் அது வெளியுறவு அமைச்சின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். மலேசிய ஆயுதப் படைகள்  வசம் (ஏ.டி.எம்.) அல்ல என்று அவர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

இங்குள்ள விஸ்மா பெர்த்தாஹானன் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  ஆயுதப்படைகளுக்குத் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய தரப்பினர் நோன்புப் பெருநாள் நன்கொடை வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசியப் பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட மொத்தம் 480 உணவுப் பெட்டிகள்  அரச  ஜோர்டானிய விமானப்படைக்குச் சொந்தமான C130 சரக்கு விமானம் மூலம் வடக்கு காசாவில் தரையிறக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

ஹாஷிமியா ஜோர்டான் சமூக நல அமைப்பு, குழந்தை பராமரிப்பு தொண்டு சங்கம் மற்றும் அரச ஜோர்டானிய விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து கரிஷ்மா மனிதாபிமான அமைப்பு மற்றும் அவுட்ரீச் மிஷன் என்ற அரசு சாரா அமைப்பு ஆகியவை   இந்த உதவிப் பொருள்களை அனுப்பின.


Pengarang :