NATIONAL

பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வரவேண்டும்- மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 26 – ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு
மன்றத்தின் 2628வது தீர்மானத்தை உறுதியாக ஆதரிக்கும் தனது
நிலைப்பாட்டை வலியுறுத்திய மலேசியா, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட
அந்த தீர்மானம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்
கொண்டது.

கடந்த ஆறு மாத காலமாக அனுபவித்து வரும் துன்புறுத்தல்கள் மற்றும்
இன்னல்களிலிருந்து காஸா மக்கள் விடுபட வேண்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நோன்பு மாதத்தை முன்னிட்டு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த
தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்
அறிக்கை ஒன்றில் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் 2728 தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
ரமலான் மாதத்தின் போது காஸாவில் அனைத்து தாக்குதல்களும்
நிறுத்தப்படும் வகையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும்,

அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட
பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம்
விரிவுபடுத்தப்பட வேண்டும் என அந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் விருப்பத்தை தனது சகாவான இஸ்ரேல் மதித்து
நடப்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்பதோடு போர்
நிறுத்தத்தை கடைபிடித்து பெரிய அளவில் மனிதாபிமான உதவிப்
பொருள்கள் காஸாவுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மனிதாபிமான விவகாரத்தில் பாதுகாப்பு மன்றத்தில் உறுப்பியம்
பெற்றுள்ள பத்து நாடுகளான அல்ஜிரியா, கயானா, எக்குவாடோர், ஜப்பான், மால்டா, முஸாம்பிக், சியேரா லியோன், ஸ்லோவேனியா, தென் கொரியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகியவை காட்டிய துணிச்சல் மற்றும் கடப்பாட்டை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :