NATIONAL

கிள்ளானில் குழந்தையைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு- இரு அந்நியப் பிரஜைகள் கைது

கிள்ளான், மார்ச் 26 –  இங்குள்ள பேரங்காடியில்  19 மாதப் பெண் குழந்தையைக் கடத்த  இரண்டு வெளிநாட்டவர்கள் மேற்கொண்ட  முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

குடும்ப மாது ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில் தனது மகள் மற்றும் தங்கையுடன் பேரங்காடியின்  மின்படிக்கட்டில்  ஏறிக்கொண்டிருந்த போது  இச்சம்பவம் நிகழ்ந்ததாக வட  கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி. எஸ்.விஜயா ராவ் கூறினார்.

அம்மாது தனது மகளின் கையைப் பிடித்துக் கொண்டு  படிகளில் ஏறிக்கொண்டிருந்த போது  பின்னால் இருந்த  இரண்டு வெளிநாட்டு ஆடவர்களில் ஒருவன்  திடீரென்று   குழந்தையைத் தூக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த மாது  அலறியவாறு  குழந்தையை தன்வசம்  இழுத்துள்ளார். அங்கிருந்து தப்பியோட  முயன்ற அவ்விரு ஆடவர்களையும் பேரங்காடியில் இருந்த பொதுமக்கள் வளைத்துப் பிடித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டு பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்  மேல் விசாரணைக்காக அவர்கள்  மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் இன்று அறிக்கை ஒன்றில் கூறினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யும்   குற்றவியல் சட்டத்தின் 363வது பிரிவின்படி இச்சம்பவம்  விசாரிக்கப்பட்டு வருகிறது  என்றார் அவர்.

முன்னதாக, டி-சட்டை மற்றும் அரைக்கால் சாட்டை அணிந்த இரண்டு வெளிநாட்டு ஆடவர்கள்  கிள்ளானிலுள்ள பேரங்காடி ஒன்றின் மின்படிக்கட்டில் கைது செய்யப்பட்டதைச் சித்தரிக்கும்  காணொளி   முகநூலில்  வைரலானது.


Pengarang :