NATIONAL

பேரரசரின் உத்தரவை உயர்ந்தபட்ச உயர்நெறியுடன் நிறைவேற்ற எம்.ஏ.சி.சி. உறுதி

புத்ராஜெயா, ஏப் 3 – மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிமின் ஆணையை உயர்ந்தபட்ச உயர்நெறியுடன்  முழுமையாக ஏற்று  செயல்படுத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) உறுதிபூண்டுள்ளது.

நாட்டின் முதல் எதிரியான ஊழலை எதிர்த்துப் போராடுவது தனது ஆட்சி காலத்தில் முதன்மைப் பணி  என்ற மாமன்னரின் உத்தரவை  ஆணையம் மதிக்கிறது என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

ஊழலற்ற நிர்வாகம் ஒரு தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானது என்பதால் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் மாமன்னரின் இந்த  உறுதியான நிலைப்பாடு பிரதிபலிப்பதோடு சமூகத்தின் ஒவ்வொரு தரப்பும் அதனை ஆதரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில்,  மாமன்னரின் ஆணையை முழுமையாகச் செயல்படுத்தவும்  கடமையை  உயர்நெறியுடனும்  நேர்மையுடனும் நிலைநிறுத்தவும் ஊழலுக்கு எதிரான முதன்மை அமலாக்க அமைப்பு என்ற முறையில்   எம்.ஏ சி.சி. உறுதியளிக்கிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றுவதில் அனைத்து மலேசியர்களும் குறிப்பாக அரசாங்க இயந்திரம் எம் ஏ.சி.சி.யுடன் இணைந்து செயலாற்றும் எனத் தாம்   நம்புவதாகவும் அவர் சொன்னார்.

தனது அரியணை அமர்வுக்குப் பிந்தைய ‘தேனிலவு காலம்’ முடிவடைந்து விட்டதாக சுல்தான் இப்ராஹிம் நேற்று முன்தினம்   கூறியிருந்தார். தேனிலவு முடிந்துவிட்டதை குறிக்கும் வகையில் அசாம் பாக்கிக்குத் தேன் வழங்கும் புகைப்படத்தையும் அவர் தனது முகநூல் பதிவில்  பகிர்ந்துள்ளார்.


Pengarang :