NATIONAL

நோன்புப் பெருநாள் சிறப்பு நடவடிக்கையின் முதல் நாளில் 7,473 குற்ற அறிக்கைகள் வெளியீடு

ஜோகூர் பாரு, ஏப் 3 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் முதல்
தேதி தொடங்கிய நோன்புப் பெருநாள் சிறப்பு சோதனை நடவடிகையின்
(எச்.ஆர்.ஏ.) முதல் நாளில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக
7,473 குற்ற அறிக்கைகளை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)
வெளியிட்டது.

அக்குற்றப் பதிவுகளில் 25 விழுக்காடு ஒன்பது பிரதானக் குற்றங்களை
அதாவது அதிக வேகம், சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறுவது, இரட்டைக்
கோடுகளில் முந்திச் செல்வது, அவசரத் தடத்தில் பயணிப்பது,
வானமோட்டும் போது கைப்பேசிகளைப் பயன்டுத்துவது, பாதுகாப்பு
வார்ப்பட்டை அணியாதது மற்றும் கவசத் தொப்பி அணியாதது
ஆகியவையும் அடங்கும் என்று ஜே.பி.ஜே. மூத்த இயக்குநர் (அமலாக்கம்)
டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

நோன்புப் பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு
அமல்படுத்தப்பட்டுள்ள இந்த 20 நாள் சிறப்பு சோதனை நடவடிக்கையில்
தமது துறையின் 2,000 உறுப்பினர்கள் பங்கு கொண்டுள்ளதாக அவர்
சொன்னார்.

சாலை போக்குவரத்து சட்ட விதிகளுக்கேற்ப வாகனங்கள் சாலையை
முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்வது, பாதுகாப்பு மற்றும்
விதிமுறை பின்பற்றல் மற்றும் பின்பற்றல் மதிப்பீடு ஆகியவற்றின் மீது
இந்த சோதனையில் கவனம் செலுத்தப்படும் என்று இங்குள்ள பண்டான்
ஓய்வுப் பகுதியில் (ஆர்.என்.ஆர்.) நடைபெற்ற 2024 சாலை பாதுகாப்பு
இயக்கம் தொடர்பிலான செய்தியாளர் கூட்டத்தின் போது அவர்
தெரிவித்தார்.

விதிமுறைகள் பின்பற்றல் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு
வாகன ஓட்டுநர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதன்
அடிப்படையில் ஜே.பி.ஜே. ஐந்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொது போக்குவரத்து வாகன சிறப்பு நடவடிக்கை (கே.பி.ஏ.), சரக்கு வாகன சிறப்பு நடவடிக்கை (கே.பி.பி.), மோட்டார் சைக்கிள் சிறப்பு நடவடிக்கை, ஒன்பது பிரதான குற்றச் சோதனை நடவடிக்கை மற்றும் தொழில்நுட்ப சிறப்பு நடவடிக்கை ஆகியவையே
அந்த ஐந்து நடவடிக்கைகளாகும் என்று அவர் விளக்கினார்.


Pengarang :