NATIONAL

நோன்புப் பெருநாள் சிறப்புச் சோதனை- சிலாங்கூரில் 382 ஜே.பி.ஜே அதிகாரிகள், உறுப்பினர்கள் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, ஏப் 4-இம்மாதம் முதல் தேதி தொடங்கி வரும் 20ஆம்
தேதி வரை அமலில் இருக்கும் நோன்புப் பெருநாள் சிறப்பு சோதனை
நடவடிக்கையின் போது சாலைகளில் போக்குவரத்து மற்றும் அமலாக்கப்
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் சிலாங்கூர் மாநில சாலை
போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த (ஜே.பி.ஜே.) 382 அதிகாரிகளும்
உறுப்பினர்களும் ஈடுபடுவர்.

சாலைகளில் வாகனமோட்டிகளின் சீரான போக்குவரத்தை கண்காணிப்பது
மற்றும் பொது போக்குவரத்து சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை
உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த சோதனை
நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில ஜே.பி.ஜே. இயக்குநர்
அஸ்ரின் பொர்ஹான் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது அதிகாரிகள் பிரதான
சாலைகளிலும் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளிலும் கண்காணிப்பை
தீவிரப்படுத்துவர் என்று அவர் தெரிவித்தார்.

அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவது, சிவப்பு சமிக்ஞை
விளக்கை மீறுவது, வாகனமோட்டும் போது கைப்பேசியைப்
பயன்படுத்துவது, இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது, அவசரத்
தடத்தில் வாகனத்தைச் செலுத்துவது உள்ளிட்ட ஒன்பது முக்கிய
குற்றங்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான அமலாக்க
நடவடிக்கையை மேற்கொள்வர் என்றும் அவர் சொன்னார்.

பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய
டிப்போக்களில் உள்ள பேருந்துகள் மீது சோதனை நடவடிக்கைளையும்
எங்கள் அதிகாரிகள் மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு பந்தாய் பாரு விரைவுச் சாலையின் பிஜேஎஸ்2 டோல்
சாவடியில் மேற்கொள்ளப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்பு சாலைத்
தடுப்புச் சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய இந்த சோதனை நடவடிக்கையில் 497 மோட்டார் சைக்கிள்கள்
சோதனையிடப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக 340 குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :