NATIONAL

ஓப் பந்தாவ் நடவடிக்கையில் வெ.588,956 மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்

புத்ராஜெயா, ஏப் 5 – இவ்வாண்டு மார்ச்  மாதம் 12 ஆம் தேதி முதல் நேற்று வரை நாடு முழுவதும்  மேற்கொள்ளப்பட்ட ஓப் பந்தாவ் 2024 நடவடிக்கையின் வாயிலாக 558,956 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு பொருள்களை   உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பறிமுதல்  செய்துள்ளது.

ரமலான் சந்தைகள், நோன்புப் பெருநாள் சந்தைகள், பொதுச் சந்தைகள்,  மார்க்கெட்டுகள், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இணைய விற்பனை உள்ளிட்ட 38,126 வளாகங்களை சோதனை செய்ததன் விளைவாக இப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.

இக்காலகட்டத்தில்  பல்வேறு வகையான குறறங்கள் தொடர்பில் பயனீட்டாளர்களிடமிருந்து மொத்தம் 1,216 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று  உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவு மையத்திற்கு வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

நடவடிக்கை எடுக்கப்பட்ட  குற்றங்களில் விலைப் பட்டியலை  வைக்கத் தவறியது, சட்டப்பூர்வ எடையிடும் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது மற்றும் போலி பொருட்களை விற்பனை செய்தது ஆகியவை அடங்கும் என அவர் தெரிவித்தார்.

விரைவான மற்றும் பயனுள்ள அடுத்தக்கட்ட   நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு  ஏதுவாக   ஒருங்கிணைந்த அமலாக்க மேலாண்மை அமைப்பு (ஐ.இ.எம்.எஸ்.) மூலம்  ஓப் பந்தாவ் நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டது என்றார் அவர்.


Pengarang :