ANTARABANGSA

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் ஐ.நா.வின் முயற்சிக்கு அமெரிக்கா தடை

நியுயார்க், ஏப் 19- பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகள்
சபையின் முயற்சிக்கு அமெரிக்கா முட்டுக் கட்டை போட்டுள்ளது. அந்த
உலக அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆக்குவதற்கு ஐ.நா. பாதுகாப்பு
மன்றம் நேற்று கொண்டு வந்த நகல் தீர்மானத்தை அந்த உலக வல்லரசு
நாடு தனது ரத்து அதிகாரத்தைப் (வீட்டோ) பயன்படுத்தி ரத்து செய்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையில் உறுப்பியம் பெற்றுள்ள
193 நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட ‘ஐ.நா.வின் உறுப்பினராகப் பாலஸ்தீன
தேசத்தை ஏற்றுக் கொள்ளுதல்‘ எனும் அந்த நகல் தீர்மானம்
அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் முறியடிக்கப்பட்டது.

இந்த நகல் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரிட்டனும்
சுவிட்ஸர்லாந்தும் கலந்து கொள்ளாத நிலையில் பாதுகாப்பு மன்றத்தின்
இதர 12 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன.

இரு நாட்டுத் தீர்வினை வலுவாக ஆதரிக்கும் நிலைப்பாட்டை அமெரிக்கா
தொடர்கிறது. பாலஸ்தீன தேசத்திற்கான எதிர்ப்பை இந்த வாக்கெடுப்பு
பிரதிபலிக்கவில்லை. மாறாக, சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு இடையிலான
விவாதங்கள் வாயிலாக இந்த நோக்கம் அடையப்பட வேண்டும்
என்பதற்கான அங்கீகாரமாக இது விளங்குகிறது என்று ஐ.நா.வுக்கான
அமெரிக்க துணை தூதர் ரோபர்ட் வூட் பாதுகாப்பு மன்றத்தில் கூறினார்.

அமெரிக்கா ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தியதை கடுமையாகச் சாடிய
பாலஸ்தீன அதிபர் மாமுட் அபாஸ், இது நியாயமற்றது, நெறியற்றது
மற்றும் நீதிக்கு புறம்பானது என வர்ணித்தார்.

பாதுகாப்பு மன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்திய
பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. தூதர் ரியாட் மன்சோர், இந்த தீர்மானம்
எங்கள் உணர்வுகளை ஒருபோதும் முடக்கி விடாது எனக் கூறினார்.

நாங்கள் எங்கள் இலக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எங்கள் முயற்சிகளையும் ஒருபோதும் கைவிட மாட்டோம் என அவர் சூளுரைத்தார்.


Pengarang :