NATIONAL

முகநூல் வழி பேரரசருக்கு  மிரட்டல் விடுத்த நபருக்கு வெ.12,000 அபராதம்

கோலாலம்பூர், ஏப் 22- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராக தனது தனது முகநூல்  பக்கத்தில் மிரட்டல் விடுத்த செம்பனைத்  தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 12,000 வெள்ளி  அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை சம்சூரி ரம்லி (வயது 45)  ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதி சித்தி அமினா கசாலி அவருக்கு இத்தண்டனையை விதித்தார்.

மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அந்த நபர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி மாலை 5.33 மணிக்கு ‘சேம்பஞ்சிர் பேராக்’ என்ற முகநூல் கணக்கின் வாயிலாக  ‘பி.என். பெஸ்ட்,  பேரரசருக்கு இளைஞர்களின் எசாசரிக்கை, அன்வாரை பதவி இறக்குங்கள் அல்லது நாங்கள் பேரரசரை பதவி இறக்குவோம்’  என்ற வாசகத்தை பதிவேற்றம் செய்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு அதே நாளில் இரவு 9 மணிக்குப் புக்கிட் பிந்தாங்கில் உள்ள  டோங் ஷின் அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்  பிரிவு 233(1)(a) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 233(3) இன் கீழ் அவ்வாடவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு  அதிகபட்சமாக 50,000  வெள்ளி அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது தண்டனைக்கு பிறகும் குற்றம் தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் மேலும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.


Pengarang :