NATIONAL

ரும்புன் சிலாங்கூர் பயணத் தொடரின் கீழ் உலு லங்காட்டிற்கு ராஜா மூடா வருகை

உலு லங்காட், ஏப் 24- ரும்புன் சிலாங்கூர் பயணத் தொடரின் ஒரு
பகுதியாக மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா
இன்று தொடங்கி மூன்று தினங்களுக்கு உலு லங்காட் மாவட்டத்திற்கு
வருகை புரிகிறார்.

இந்த பயணத்தின் முதல் கட்டமாக ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் மற்றும் 150 வட்டார மக்களுடன்
தெராஸ் ஜெர்னாங்கில் உள்ள காக் லியா வாரோங்கில் காலைச் சிற்றுண்டி
எடுத்துக் கொள்வார்.

பின்னர் அவர். உலு லங்காட் மாவட்ட நில அலுவலகம், அம்பாங் ஜெயா
நகராண்மைக் கழகம், கல்வி இலாகா, சகாதார இலாகா மற்றும் மாவட்ட
போலீஸ் தலைவர் வழங்கும் விளக்கமளிப்பில் கலந்து கொள்வார்.

இன்று தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் இந்த ரும்புன்
சிலாங்கூர் பயணத்தின் போது அவர் அல்-உபைதி பள்ளிவாசல், கம்போங்
தாசேக் தம்பாஹான், லாமான் மேடான் செலேரா எம்.பி.ஏ.ஜே. ஆகிய
இடங்களுக்கும் வருகை புரிவார்.

இவை தவிர, ஜாலான் ரெக்கோ டவுன் டவுன் இரவுச் சந்தை, தெராஸ்
ஜெர்னாங் வாரோங் ரொட்டி சானாய், காஜாங் வால் முரல், மேடான்
சாத்தே காஜாங் மற்றும் பாங்கி சதுக்கம் 2 ஆகியவையும் அவர் வருகை
புரியவிருக்கும் இடங்களாகும்.

இந்த பயணத்தின் போது கால்பந்து கிளினிக், சிலாங்கூர் எப்.சி.
விளையாட்டாளர்களுடன் அளவளாவுதல் சீலாட் படைப்பு, நடனம்,
கலாசார படைப்புகள், கூட்டுச் சமையல், விருந்து உள்ளிட்ட பல்வேறு
சுவாரஸ்மான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூகவியல் முறையை
மேம்படுத்தும் நோக்கில் இந்த காகாசான் ரும்புன் சிலாங்கூர் நிகழ்வு
நடத்தப்படுகிறது.


Pengarang :