ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 13 பாலஸ்தீனர்கள் பலி

கெய்ரோ, ஏப் 29: காஸாவின் தென்பகுதி நகரான ராஃபாவிலுள்ள உள்ள மூன்று
வீடுகள் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 13 பேர்
உயிரிழந்ததோடு மேலும் பலர் காயமுற்றதாக மருத்துவ வட்டாரங்கள்
இன்று தெரிவித்தன.

இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்தது.

பாலஸ்தீன வட பகுதி நகரான காஸாவில் இரு வீடுகளை குறி வைத்து
இஸ்ரேலிய இராணுவம் நடத்திய மற்றொரு தாக்குதலில் பலர்
பலியானதோடு காயங்களுக்கும் உள்ளானதாக சுகாதார அதிகாரிகள்
கூறினார்.

அண்மைய சில மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்
தாக்குதல்கள் காரணமாகப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ராஃபா
நகரில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பில்
இஸ்லாமிய அமைப்பான ஹமாஸின் தலைவர்களுடன் எகிப்து
அதிகாரிகள் பேச்சு நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இந்த
தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தங்கள் நாட்டின் மீது தாக்குதல்
மேற்கொண்ட ஹமாஸ் படையினரை முற்றாகத் துடைத்தொழிக்கும்
நோக்கில் தாக்குத்லைத் தொடங்கிய இஸ்ரேல் காஸா நகரை தனது
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த தொடர் தாக்குதல்களில் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்
பலியாகியுள்ளனர். இந்த போர் அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளை
நிர்மூலமாக்கியுள்ளதோடு. இதனால் சுமார் 23 லட்சம் பேர் தங்கள்
குடியிருப்புகளை இழந்து அகதிகள் ஆகியுள்ளனர்.


Pengarang :