ANTARABANGSA

பாகிஸ்தான் பிரதமர், துருக்கி வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

ரியாத், ஏப் 30- சவூதி அரேபியாவில் நடைபெறும் உலகப் பொருளாதார
ஆய்வரங்கின் (டபள்யூ.இ.எப்.) சிறப்புக் கூட்டத்தின் இடைவேளையில்
பாகிஸ்தான் பிரதமர் முகமது சபேஷ் ஷாரிப்புடன் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் சந்திப்பு நடத்தி இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

சுமார் அரை மணி நேரத்திற்கு நீடித்த இந்த சந்திப்பின் போது புத்ராஜெயா-
இஸ்லாமாபாத் இடையே உறவுகளை வலுப்படுத்துவதிலும் வர்த்தகத்தை
அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்வதிலும் தங்களுக்கு உள்ள
கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினர்.

மேலும், புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவது மற்றும் வர்த்தகம்,
கல்வி, தற்காப்பு, சுற்றுலா மற்றும் மனித மூலனத் துறைகளில்
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும்
விவாதித்தனர்.

முன்னதாக, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் பிரதமர்
அன்வாரை மரியாதை நிமித்தம் சந்தித்தார். சுமார் முப்பது நிமிடங்களுக்கு
நீடித்த இந்த சந்திப்பில் மேற்கு ஆசியாவின் புவிஅரசியல் நிலவரம்
மற்றும் காஸாவில் இஸ்ரேலின் அட்டூழியம் உள்ளிட்ட விவகாரங்கள்
முக்கிய இடத்தைப் பிடித்தன.

இது தவிர மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையே முதலீடு, வர்த்தகம்,
கல்வி, தற்காப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது
குறித்தும் அவர்கள் பேச்சு நடத்தினர்.

சவூதி அரேபியாவில் நடைபெறும் இரண்டு நாள் இந்த உலக பொருளாதார
ஆய்வரங்கின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் அன்வார் பங்கேற்றுள்ளார்.
‘மேம்பாட்டிற்கு உலக கூட்டாண்மை, வளர்ச்சி மற்றும் எரிசக்தி‘ எனும்
கருப்பொருளிலான இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்துறையினர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


Pengarang :