NATIONAL

அனைத்து ஊழியர்களையும் அரசு மதிக்கிறது- அரசு துறையினருக்கான சம்பள உயர்வை விவாதப் பொருளாக்க வேண்டாம்

உலு சிலாங்கூர், மே 2- நேற்று அனுசரிக்கப்பட்ட தொழிலாளர் தினத்தை
முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அரசு
ஊழியர்களுக்கான சம்பள உயர்வை யாரும் விவாதப் பொருளாக்கக்
கூடாது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் அரசாங்கம் மதித்து
வருவதோடு உற்பத்தி அதிகரிப்பக்கு ஏற்ப தனியார் துறை ஊழியர்களும்
உயர்ந்த பட்ச சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக முற்போக்கு
சம்பளக் கொள்கையின் கீழ் குறைந்த பட்ச சம்பள முறையை அது மறு
ஆய்வு செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முன்களப் பணியாளர்களாக அரசாங்க ஊழியர்கள்
விளங்குகின்றனர். நாட்டின் பொருளாதாரம் துடிப்புமிக்கதாக இருப்பதன்
மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உயரிய ஆற்றலும்
ஆக்கத்திறனம் கொண்ட அரசு ஊழியர்கள் நமக்குத் தேவை என்று அவர்
சொன்னார்.

அரசு ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்குவதன்
மூலம் அவர்களுக்கு உத்வேகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்பினை
உண்டாக்கி அதன் மூலம் நாட்டை மேம்படுத்துவதற்கு ஆக்கமுடன்
உழைப்பதற்குரிய சூழலை உருவாக்க இயலும் என அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற சுவாரா அனாக் மடாணி நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு 13 விழுக்காடு சம்பள உயர்வு
வழங்கப்படவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
அறிவித்தார். எதிர்வரும் டிசம்பர் மாதம் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய
சம்பள உயர்வு 1,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டை
உள்ளடக்கியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க ஊழியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் கடுமையான
முயற்சியின் வாயிலாக நாடு கடந்தாண்டு 32,950 கோடி வெள்ளி
மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்ததாக ஸ்டீவன் சிம் கூறினார்.


Pengarang :