NATIONAL

30,000 பொறியாளர்களை உருவாக்குவதற்கு ஏதுவாக திவேட் திட்டம் தரம் உயர்த்தப்படும்

கோத்தா பாரு, மே 3- நாட்டில் நிலவும் 30,000 பொறியாளர்கள்
பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் முயற்சியாகத் திவேட் எனப்படும்
தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் கல்வி தரம் உயர்த்தப்படும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதே சமயம், நாம் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய செயற்கை
நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையிலும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின்
கட்டாயமாகியுள்ளது என்று அவர் சொன்னார்.

புதிய தொழில்நுட்பங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மலேசியர்கள்
என்ற முறையில் நமது கலாசாரம், பண்புக் கூறுகள் மற்றும் உரு பொருள்
தொடர்பான அச்சம் குறித்து நாட்டிலுள்ள அனைத்து தலைவர்களிடமும்
நான் எடுத்துரைத்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள துஞ்சாங் ஆர்.டி.சி. மையத்தில் கிளந்தான் மாநில
நிலையிலான 2024 மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து
கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிதாக அறிமுகமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு துறையில் பின்
தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய ஏ.ஐ. கல்வி திட்டம் மஹாட்
தாபிஷ் மற்றும் திவேட் கல்வித் திட்டங்களிலும் புகுத்தப்படும் என்று
அன்வார் கூறினார்.

இந்த முயற்சியை சாத்தியமாக்கும் வகையில் மலேசியாவில் ஏ.ஐ.
தொழில்நுட்பத்தை மேம்படுத்த மைக்ரோசோப்ட் நிறுவனம் 1,050 கோடி
வெள்ளியை இந்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாத்தியத்தை
வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

அரசு ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டு சம்பள உயர்வு வழங்கும்
திட்டத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ஆதரவு
கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் டிசம்பர் மாதம் அமல்படுத்தப்படவுள்ள இந்த சம்பள உயர்வு
தொடர்பான பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை ஏதும்
இருக்காது எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :