NATIONAL

இணைய  முதலீடு மோசடிக் கும்பல் முறியடிப்பு- எண்மர் கைது

கோலாலம்பூர், மே 3-  பெட்டாலிங் ஜெயாவில்  இரண்டு இடங்களில் கடந்த மாதம் 25ஆம் தேதி  போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில்  இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் டிக்டாக் செயலி வாயிலாக  செயல்பட்டு வந்த  முதலீட்டு மோசடி கும்பல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும்  21 முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

அக்கும்பலிடமிருந்து ஏழு மடிக்கணினிகள், 11 கைப்பேசிகள், பல போலி அமெரிக்க டாலர்கள் மற்றும் 10  தங்கக் கட்டி மாதிரிகள் உட்பட பல்வேறு பொருட்களை தாங்கள்  பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

இந்தக் கும்பல் உள்ளூர் மக்களை குறிவைத்து இணையம் வழி  முதலீட்டு மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட வளாகங்கள் வாடிக்கையாளர் சேவை மையமாகவும் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தி விளம்பரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன என்று அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்  நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள், மதிப்பீட்டாளர்கள், பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் டிக்டாக் நேரடி வர்ணனையாளர்களும்  அடங்குவர் என  அவர் கூறினார்.

ஹாங்காங்கில் செயல்படுவதாகக் கூறப்படும் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் பங்கேற்க பொதுமக்களை அக்கும்பல்  ஊக்குவிப்பதாக கூறிய அவர், ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் டெலிகிராம் குழுவில் சேர்க்கப்படுவார்கள் என்று சொன்னார்.

இக்கும்பல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்  முதல் இந்த மோசடி  நடவடிக்கையில் தீவிரமாக  ஈடுபட்டு வந்ததாக காவல்துறை நம்புகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்  420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது  என்று அவர் கூறினார்.


Pengarang :