NATIONAL

சிலாங்கூர் சட்டமன்றத்தில் புதிய யோசனைகளை முன்வைக்கக்கூடிய இளம் பிரதிநிதிகள் அதிகம் தேவை

உலு சிலாங்கூர், மே 3- புதிய யோசனைகளை முன்வைக்கக் கூடிய இளம்
பிரதிநிதிகள் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு அதிகளவில் தேவை என்று
மாநில சட்டமன்ற முன்னாள சபாநாயகர் ஹன்னா இயோ கூறினார்.

இளம் தலைவர்கள் தங்கள் கருத்துகளையும்  தொகுதி தொடர்பான விவகாரங்களை முன்வைப்பதற்கு மாநில சட்டமன்றம் போதுமான வாய்ப்பினை வழங்குகிறது என்று அவர்
தெரிவித்தார்.

இளம் தலைமுறையினர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும்
பட்சத்தில் புதிய கருத்துகளை முன்வைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும்.

முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் என்ற முறையில் சிலாங்கூர்
சட்டமன்றத்தின் ஆற்றல் என்னவென்று எனக்குத் தெரியும். மக்களுக்காக
சேவையாற்றுவதற்கு ஏதுவாக சட்டமன்றத்திற்கு இளம் தலைவர்கள்
தேவைப்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டு மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளை அதிகளவில்
ஏற்பாடு செய்த மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின்
சேவையை ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தாவும்
தொடர்வார் என அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள உலுயாம் பாருவில் நடைபெற்ற கோல குபு பாரு
தொகுதி வேட்பாளருடன் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்வின் போது
செய்தியாளர்களிடம் ஹன்னா இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில்
ஜசெக தலைவர் லிம் குவான் எங்கும் கலந்து கொண்டார்.

கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு.
பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும்
சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல்
சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா
ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய்
காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் எதிர்வரும் மே 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :