NATIONAL

பிரதமர் அன்வார் கட்டாருக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம்- பொருளாதார ஆய்ரங்கில் பங்கேற்கிறார்

டோஹா, மே 13- மேற்காசிய நாடுகளின் முதலீடுகளைக் கவர்வதற்கான
முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம், நோக்கத்தின் ஒரு பகுதியாகக் கட்டார் நாட்டிற்கு இன்று
தொடங்கி எதிர்வரும் 14ஆம் தேதி வரை மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம்
மேற்கொண்டுள்ளார்.

இந்த மூன்று நாள் பயணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிற்கு
அடர்த்தியான நிகழ்ச்சி நிரல் காத்துக் கொண்டிருக்கிறது. உள்ளுர் நேரப்படி
இன்று காலை 10.30 மணிக்கு கட்டார் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ
வரவேற்புடன் அவரது நிகழ்ச்சி நிரல் தொடங்குகிறது.

பிரதமர் அன்வாரை கட்டார் எமிர் ஷேக் தாமிம் பின் ஹாமாட் அல் தானி
வரவேற்பார். பின்னர் அவர் நண்பகல் விருந்து நிகழ்வில் கலந்து
கொள்வார்.

நண்பகல் விருந்துக்குப் பின்னர் இந்த பயணத்தின் பிரதான நிகழ்வான
கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின்
அப்துல்ரஹ்மான் அல் தானிக்கும் பிரதமருக்கும் இடையிலான
அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெறும்.

பாலஸ்தீனத்தின் சமீபத்திய நிலவரங்கள் குறிப்பாக ராஃபா மீதான
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இரு தலைவர்களின் பேச்சில் முக்கிய இடத்தைப்
பெறும்.

இன்று மாலை கட்டார் நாட்டின் சுமார் 30 தொழில் துறை தலைவர்களைச்
சந்திக்கவிருக்கும் நிதியமைச்சருமான அன்வார், மலேசியாவில் முதலீட்டு
வாய்ப்புகள் மற்றும் நாட்டின் நடப்பு பொருளாதார மேம்பாடு குறித்து
எடுத்துரைப்பார்.

இதனிடையே, தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள
பிரதமர், கட்டார் பொருளாதார ஆய்வரங்கில் தாம் பங்கேற்கும் அதே வேளையில் டோஹாவில் உள்ள மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின்
கிளை வளாகத்தையும் திறந்து வைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலிய மற்றும் எரிவாயு வளம் நிறைந்த கட்டார் நாட்டின்
வருமானத்தில் 70 விழுக்காடு அவ்விரு இயற்கை வளங்கள் மூலம்
பெறப்படுகிறது.


Pengarang :