ANTARABANGSA

மேற்கு சுமத்ராவில் வெள்ளம், நிலச்சரிவு- 37 பேர் பலி, 17 பேரைக் காணவில்லை

தானா டாத்தார், மே 13 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் கடந்த வாரம்  ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததோடு  மேலும் 17 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  காணாமல் போனவர்களைத் தேடும் பணி  தொடர்ந்து நடைபெற்று  வருவதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

மேற்கு சுமத்ரா மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் கடந்த  சனிக்கிழமை மாலை பெய்த மழையால்  திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் குளிர்ந்த எரிமலைக் குழம்பு , எரிமலை சாம்பல்  மற்றும் சேற்று நீர் ஆகியவற்றின் கலவை பெருக்கெடுத்ததாக மாநில மீட்பு குழுத் தலைவர் அப்துல் மாலிக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்..

இந்தோனேசியாவில் லஹார் என அழைக்கப்படும் குளிர்ந்த லாவார் கழம்பு  எரிமலை சுமத்ராவில் இன்னும் தீவிரமாக இருக்கும்  எரிமலைகளில் ஒன்றான மராபி மலையிலிருந்து வழிந்தோடியது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மராபி எரிமலை  வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து அம்மலையில் தொடர் குமுறல்கள்  நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

கனமழையால் மராபி எரிமலையிலிருந்து சாம்பல் மற்றும் பெரிய பாறைகள் உள்ளிட்டவை  அடித்துச் செல்லப்பட்டன  என்று அப்துல் மாலிக் கூறினார்.

குளிர் எரிமலை குழம்பின் பிரவாகம் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவை சமீபகாலமாக எங்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக உள்ளன.  இதில்  பிரச்சனை என்னவென்றால் இந்த நிகழ்வுகள்  எப்போதும் இரவு பின்னேரம் தொடங்கி விடியும் வரை நீடிப்பதுதான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு உள்ளூர் மீட்புப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் இராணுவம் அடங்கிய சுமார் 400 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மீட்புப் பணிகள் சேதமடைந்த சாலைகளால் சிக்கலாகியுள்ளன.


Pengarang :