ANTARABANGSA

காஸா போர் தொடங்கியதிலிருந்து 500 மருத்துவப் பணியாளர்கள் பலி

இஸ்தான்புல், மே 13 – கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து குறைந்தது 500 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

நேற்று  அனைத்துலக தாதியர் தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு இந்த அறிக்கையை அமைச்சு வெளியிட்டது.

இங்கே பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள்  138
தாதியர்களைக் கொன்ற  நிலையில் இந்த நாள் கடந்து செல்கிறது. இந்த ஆண்டு அனைத்துலக தாதியர் தினம் விதிவிலக்கானது, மேலும் இந்த ஆண்டை தாதியர் ஆண்டு என்று பெயரிடுவது எங்கள் உரிமையாகும் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கலீல் அல்-தக்ரான் கூறினார்.

செவிலியர்கள், மருத்துவச்சிகள் மற்றும் மருத்துவ குழுவினர் பாலஸ்தீன மக்கள் என்ற  துணியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். காயமடைந்தவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தேசிய மற்றும் மனிதாபிமானப் பாத்திரத்தை ஏற்ற தியாகிகள் அவர்கள் என்று அல்-தக்ரான் தெரிவித்தார்.

காயமடைந்த,  கூடாரங்களில் இடம்பெயர்ந்த அல்லது இஸ்ரேலிய இனவெறிச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலைகளிலும்  தாங்கள் எடுத்த உறுதிமொழிக்கேற்ப வீரமரணம் அடைந்த மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை 500 பேரை எட்டும்.  மேலும் 1,500 பேர் காயமடைந்தனர் மற்றும் 312 பேர் கைதிகளாகப் பிடிபட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும்  அவர்களுக்கு எதிராக நடத்தப்படும்  தாக்குதல்களை குற்றமாக்குவதற்கும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று அல்-தக்ரான் கோரிக்கை விடுத்தார்.

காஸாவில் உள்ள சுகாதார குழுக்களுக்கு உதவும் வகையில் தக்கள்  மருத்துவ மற்றும் தாதியர்  குழுக்களை அனுப்புமாறு தொழிற்சங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பை அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வயும் கொடூரத் தாக்குதலில் 35,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 76,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Pengarang :