ANTARABANGSA

மேற்கு சுமத்ராவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது

ஜாக்கார்தா, மே 14: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை பெய்த கனமழையால் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் குளிர்ந்த எரிமலைக் குழம்பு , எரிமலை சாம்பல்  மற்றும் சேற்று நீர் ஆகியவற்றின் கலவை பெருக்கெடுத்தது.

இச்சம்பவத்தின் இறப்பு எண்ணிக்கை முதலில் 43 ஆக இருந்த வேளையில் தற்போது 52ஆக அதிகரித்துள்ளது.

இறந்த 52 பேரில், 45க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேற்கு சுமத்ரா பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இல்ஹாம் வஹாப் தெரிவித்தார். இன்னும் காணாமல் போன 17 பேரை உள்ளூர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து தேடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

அம்மூன்று மாவட்டங்களில் 249 வீடுகள், நெற்பயிர்கள் உட்பட 225 ஹெக்டேர் நிலங்கள் மற்றும் பெரும்பாலான பிரதான வீதிகள் சேதமடைந்துள்ளதாக இல்ஹாம் கூறினார். அங்கு ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளம் குறைந்துள்ளது.

“காணாமல் போனவர்களைத் தேடுவதைத் தவிர, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளத்தால் கொண்டு வரப்பட்ட மண், மரக்கட்டைகள், பெரிய பாறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவோம்” என்றும் இல்ஹாம் கூறினார்.

– ராய்ட்டர்ஸ்


Pengarang :