NATIONAL

மலேசியாவுக்கு இரண்டாவது கேசினோ தேவையில்லை- பிரதமர் திட்டவட்டம்

டோஹா, மே 15 – நாட்டில் இரண்டாவது சூதாட்ட விடுதிக்கு அனுமதி இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மலேசியா இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று நேற்று கட்டார் பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையான துறைகள் இவையாகும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

எனது தனது நிர்வாகத்தின் கீழ் நாட்டில் இரண்டாவது கேசினோ தேவையில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“உறுதியாக இல்லை. மலேசியா (இரண்டாவது) சூதாட்ட வணிகத்தில் ஈடுபட வேண்டியதில்லை. இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி மாற்றம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்”. மேலும், இது நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்குப் போதுமானது என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு ஆய்வரங்கின் முழுமையான அமர்வில் நெறியாளர் ஹஸ்லிண்டா அமீன் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, ஜோகூர் மாநிலத்தின் இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டியில் இரண்டாவது சூதாட்ட மையத்திற்கான உரிமம் வழங்குவதற்கான சாத்தியம் குறித்து வெளிநாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியைப் பிரதமர் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதுவரை மலேசியா ஒரே ஒரு கேசினோ உரிமத்தை மட்டுமே வழங்கியுள்ளது. இது கடந்த 1969ஆம் ஆண்டு கெந்திங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சூதாட்ட மையங்களைக் கொண்டுள்ளது.

இதனிடையே, பாலஸ்தீன-இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோதிலும் அது வணிகத்தை பாதிக்கவில்லை என்பதோடு நாடு தொடர்ந்து புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது என்று அன்வார் கூறினார்.


Pengarang :