NATIONAL

ஹமாஸ் தலைவருடனான சந்திப்பு கவலையை ஏற்படுத்தலாம்- அமைதி முயற்சிகளுக்கு உதவுவதே எனது நோக்கம்- பிரதமர்

டோஹா, மே 15- ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவருடன் நேற்று தாம்
நடத்திய சந்திப்பு மலேசிய நண்பர்களுக்குக் குறிப்பாக, மேற்கத்திய
நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை தாம்
உணர்ந்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இருப்பினும், காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிக்கும்
சுதந்திர நாடு என்ற முறையில் ஹமாஸ் இயக்கத்துடனான நட்புறவை
அந்நோக்கத்திற்காக மலேசியா பயன்படுத்தும் என்று அவர் சொன்னார்.

கட்டார் நாட்டை உதாரணம் காட்டிய அவர், அரபு தீபகற்ப நாடான அது
ஹமாஸ் இயக்கத்துடன் கொண்டிக்கும் நட்புறவின் காரணமாக 109
பிணைக்கைதிகளை விடுவிப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியது என
குறிப்பிட்டார்.

நாங்களும் அதே அணுகு முறையைக் கடைபிடிக்கிறோம் (நட்புறவைப்
பேணிக் காப்பதில்) என்று கட்டாருக்கான மூன்று நாள் பயணத்தின்
முடிவில் மலேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

காஸா நெருக்கடிக்கு விரைவான தீர்வு காண்பதற்கு பல்வேறு தரப்பினர்
முன்வைத்துள்ள கருத்துகளை கவனத்தில் கொள்ளுமாறு ஹமாஸ்
தலைவர் இஸ்மாயில் ஹனியேவுடன் நடத்திய அச்சந்திப்பின் போது தாம்
கேட்டுக் கொண்டதாக அன்வார் சொன்னார்.

அமைதித் தீர்வுக்கு ஹமாஸ் தலைவர் தயாராக இருப்பது போல்
தோன்றுகிறது. எனினும், இஸ்ரேலிய இராணுவம் காஸா மற்றும் மேற்கு
கரை மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது அவர்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது என்றார் அவர்.

கட்டாரும் இதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஹமாஸ் சில
நிபந்தனைகளை நிறைவேற்ற தயாராக உள்ளதாகவும் எனினும், அந்த நிபந்தனைகளை ஏற்க இஸ்ரேல் தயாராக இல்லை என்றும் கட்டார் பிரதமர் என்னிடம் தெரிவித்தார் என அவ கூறினார்.

அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும்
உரிமை பி.எல்.ஒ., ஃபாத்தா, மற்றும் பாலஸ்தீன அதிகார தரப்பை போல்
ஹமாஸ் அமைப்புக்கும் உள்ளது. அமைதி முயற்சிகளுக்கு
ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை மலேசியா கொண்டுள்ளது என அவர்
மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :