NATIONAL

சிங்கப்பூர் புதிய பிரதமர் மலேசியாவுடனான நல்லுறவை வலுப்படுத்துவார்- தெங்கு ஸப்ருள் நம்பிக்கை

கோலாலம்பூர், மே 15- சிங்கப்பூரின் புதிய பிரதமராக இன்று
பதவியேற்கவுள்ள லோரன்ஸ வோங் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும்
இடையிலான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவார் என்று
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு
ஸப்ருள் அப்துல் அஜிஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரும் மலேசியாவும் நீண்ட காலமாக வலுவான வர்த்தக மற்றும்
முதலீட்டு பங்காளிகளாக இருந்து வந்துள்ளதாக அவர் தனது எக்ஸ்
தளத்தில் கூறியுள்ளார்.

எனினும், உலகம் இப்போது இரண்டு மிகபெரிய மாற்றங்களைக் சந்தித்து
வருகிறது. உலகின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக
உலக மயமாக்கல் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை சுழியம் அளவுக்கு
குறைக்கும் இலக்கை அடைவது ஆகியவை அவ்விரு மாபெரும்
மாற்றங்களாகும்.

இவ்விரு விஷயங்களிலும் ஆசியானுக்கு தேவையான
தலைமைத்துவத்தை உருவாக்குவதில் குறிப்பாக, அடுத்தாண்டு ஆசியான்
தலைமைப் பதவியை ஏற்பதில் மலேசியாவும் சிங்கப்பூரும் ஆற்றலைக்
கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் வர்தக மற்றும் தொழிலியல் அமைச்சரான கான் கிம் யோங்
அந்நாட்டின் துணைப் பிரதமராக நியமனம் செய்யப்பட்டதை தாம்
வரவேற்பதாகவும் ஸப்ருள் சொன்னார்.

ஜோகூரில் முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் இரு நாடுகளுக்கும்
மேம்பாட்டைக் கொண்டு வரக்கூடிய முதலீடுகள் உள்ளிட்ட பரஸ்பர நலன்
சார்ந்த விவகாரங்களில் எனது நீண்ட கால நண்பர்களான அவ்விரு
தலைவர்களும் முக்கியப் பங்காற்றுவர்கள் என பெரிதும் எதிர்பார்க்கிறேன்
என்றார் அவர்.


Pengarang :