NATIONAL

இணைய மோடியில் சிக்கி ஆடவர் வெ.10 லட்சம் இழந்தார்

அலோர்ஸ்டார், மே 15- சமூக ஊடகத்தில் வெளியான ‘வார்பெர்க் பின்கஸ்
லேகஸி‘ எனும் முதலீட்டுத் திட்டத்தில் கவரப்பட்ட ஆடவர் ஒருவர் பத்து
லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை இழந்தார்.

முதலீட்டு மோசடி சம்பவம் தொடர்பில் 57 வயதுடைய ஆடவர் ஒருவர் கூலிம்
போலீஸ் நிலையத்தில் கடந்த மே 9ஆம் தேதி புகார் செய்ததாகக் கெடா
மாநில வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர்
சூப்ரிண்டெண்டன் லோய் இயோ லிக் கூறினார்.

அந்த ஆடவர் பேஸ்புக் வாயிலாக தனக்கு வந்த ஒரு இணைப்பை
சொடுக்கிய நிலையில் புலனக் குழு ஒன்றில் அவரின் பெயரும்
சேர்க்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அந்த முதலீட்டுத் திட்டத்தில் 2,000
வெள்ளியை முதலீடு செய்த அவர் 780 வெள்ளியை லாபமாகப்
பெற்றுள்ளார்.

அதன் பின்னர் சந்தேகப் பேர்வழி கொடுத்த வங்கி கணக்கிற்கு அந்த
ஆடவர் சுமார் பத்து லட்சம் வெள்ளியை 21 தடவை கட்டங் கட்டமாக
அனுப்பியுள்ளார் என்று லோய் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அதன் பின்ர் தனக்கு லாபம் ஏதும் வராததை கண்ட அந்த ஆடவர்
சந்தேகப் பேர்வழியைத் தொடர்பு கொண்ட போது அனைத்துப்
பணத்தையும் மீண்டும் பெற வேண்டுமானால் மேலும் ஒன்பது லட்சம்
வெள்ளியை அனுப்ப வேண்டும் என அந்நபர் கூறியுள்ளார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆடவர் கூடுதல் பணத்தை
அனுப்ப மறுத்துள்ளார். அந்த பேஸ்புக் பக்கத்தை போலீசார் சோதனை
செய்ததில் அது போலியானது என்பதோடு அனைத்துலக முதலீட்டு
நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது என்றார் அவர்.

இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக க் கூறிய லோய், குறுகியக் காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொண்டார்.


Pengarang :