NATIONAL

இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்புடைய மூன்று அந்நிய நாட்டினர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்

கோலாலம்பூர், மே 15- கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் 158 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய நாட்டவரான அவிட்டன் ஷாலோமுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று அந்நிய பிரஜைகள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மூவரும் மலேசியாவில் தடை செய்யப் பட்டவர்களை திரும்பி அனுப்பும் நடைமுறைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது ஈசா கூறினார்.

அந்த மூவரும் கடந்த திங்கட் கிழமையும் நேற்றும் தங்களின் சொந்த நாடான அமெரிக்கா, துருக்கி மற்றும் ஜோர்ஜியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த எழுவர் கடந்த மே மாதம் 10ஆம் தேதி விடுவிக்கப்பட்டதாக இன்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு முடிக்கப்பட்டு அந்த ஏழு சந்தேகப் பேர்வழிகளும் விடுவிக்கப்பட்ட போதிலும் புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு, புதிய சாட்சிகள், புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் விசாரணை அறிக்கை எந்நேரத்திலும் திறக்கப்படலாம். விடுவிக்கப்பட்டால் அவர்கள் மேல் இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என யாரும் நினைக்க வேண்டாம் என்றார் அவர்.

இஸ்ரேலிய ஆடவர் சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பில்  பத்து பேர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 2012ஆம் ஆண்டு பாதுகாப்புக் குற்றச் சட்டத்தின் (சிறப்பு நடவடிக்கைகள்) (சோஸ்மா) கீழ் மறுபடியும் கைது செய்யப்பட்டனர்.


Pengarang :