ANTARABANGSA

இந்தோனேசியாவில் வெள்ளம், எரிமலை சகதியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரிப்பு

ஜாகர்த்தா, மே 15 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் குளிர்ந்த எரிமலை சகதியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.

வார இறுதியில் பெய்த பருவமழையால் மேற்கு சுமத்ராவின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மராபி மலையிலிருந்து குளிர்ந்த எரிமலை குழம்பு மற்றும் சகதி பெருக்கெடுத்ததால்  மலைச்சரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பேரிடர் காரணமாக முப்பத்தைந்து பேரை இன்னும் காணவில்லை. மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.  1,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜெர்மனி செய்தி நிறுவனமான டி.பி.ஏ. கூறியது.

லஹார்ஸ் என்றும் அழைக்கப்படும் குளிர்ந்த எரிமலை வெள்ளம் எரிமலை வெடிப்பின் போது அல்லது அதற்குப் பிறகு ஏற்படக்கூடிய எரிமலைச் சகதி ஆகும்.

பேரிடரில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைப்பதற்கான முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் இடிந்த பாலங்கள் மற்றும் பழுதடைந்த சாலைகள்  மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளதாகவும் மீட்பு நிறுவனத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுஹரியாண்டோ கூறினார்.

சில பகுதிகளுக்கு உதவி வழங்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் வீடுகள் சேதமடைந்த பகுதிகளிலிருந்த  குடியிருப்பாளர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என்றார் அவர்.


Pengarang :