NATIONAL

மலேசியா சார்பில் ஆலோசகரை நியமிக்க கிர்கிஸ்தான் குடியரசு வேண்டுகோள்

பிஷ்கேக், மே 16- தங்கள் நாட்டிற்கு ஆலோசகர் ஒருவரை நியமிக்கும்படி
மலேசியாவை கிர்கிஸ்தான் குடியரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று இங்குள்ள அலா அர்ச்சா அரசாங்க மாளிகையில் நடைபெற்ற
சந்திப்பின் போது கிர்க் குடியரசின் அமைச்சரவைத் தலைவர் அக்கில்பெக்
ஷாபாராவ் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அவர் சொன்னார்.

சாத்தியம் இருக்கும் பட்சத்தில் தங்கள் (கிர்க்) அரசாங்கத்திற்கு
சேவையாற்றக்கூடிய ஆலோசகர் ஒருவரை நியமிக்கும்படி அவர்
(ஷாபாரோவ்) கேட்டுக் கொண்டார். மலேசிய அரசாங்கத்திற்கு கிடைத்த
உயரிய மரியாதை மற்றும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இது
அமைந்துள்ளது என்று அன்வார் தெரிவித்தார்.

கிர்க் குடியரசுக்கு தாம் மேற்கொண்டுள்ள இரண்டு நாள்
பயணத்தையொட்டி மலேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அன்வார்
இதனைக் கூறினார். கிர்க் குடியரசின் அதிபர் சாடிர் ஷாபாரோவ்வின்
சிறப்பு அழைப்பின் பேரில் அன்வார் இந்த பயணத்தை
மேற்கொண்டுள்ளார்.

அமைச்சரவைத் தலைவர் பிஷ்கேக்கின் இந்த பரிந்துரை அடுத்த
அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படும் என்று
நிதியமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசகர் நியமனம் இரு தரப்பு உறவின் அடையாளமாக
மட்டுமின்றி மலேசிய முதலீட்டாளர்களுக்கு அளப்பரிய வாய்ப்பினை
வழஙகக் கூடியதாகவும் அமையும். ஏனென்றால் இரு நாடுகளும்
ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்து கொள்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன
என்றார் அவர்.

மலேசியாவின் ஹலால் துறை மற்றும் தாபோங் ஹாஜி வாரியம்
ஆகியவை கிர்க் குடியரசை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறிய அன்வார்,
தாபோங் ஹாஜியின் நிர்வாக முறை குறித்து அறிந்து கொள்ள அந்நாடு
ஆர்வமாக உள்ளது என்றார்.


Pengarang :