NATIONAL

பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் நாட்டின் நலனை முன்நிறுத்தவும் புதிய சிங்கை பிரதமர் உறுதி

சிங்கப்பூர், மே 16 –  சிங்கப்பூரின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள   லோரன்ஸ் வோங், தனது அரசாங்கம் “அருகில் மற்றும் தொலைவில்”  உள்ள பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் அதேவேளையில் அனைத்துலக நிலையில்  அதிகரித்து வரும் போட்டி மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் தேசத்தின் நலன்களை முன்னோக்கி கொண்டுச் செல்லும் என்று கூறியுள்ளார்.

நேற்று மாலை இஸ்தானாவில் நாட்டின் அரசாங்கத் தலைவராக பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதலாவது உரையை ஆற்றிய 51 வயதான வோங்,  அமெரிக்கா மற்றும் சீனா  நாடுகளுக்கு இடையே தவிர்க்க முடியாமல் பிரச்சனைகள் எழுந்தாலும் அவ்விரு நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து நட்பினை பேணி என்றார்.

நாம் இப்போது மோதல் மற்றும் போட்டியின் உலகத்தை எதிர்கொள்கிறோம். புதிய இன்னும் வரையறுக்கப்படாத உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க பெரும் சக்திகள் போட்டியிடுகின்றன.

இந்த மாற்றம் புவிசார் அரசியல் பதற்றத்துடன் குறிக்கப்படும். அத்துடன் பாதுகாப்புவாதம் மற்றும் தேசியவாதம் எங்கும் பரவியிருக்கும்  என அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அதன் உரிமைகள் மற்றும் நலன்களை நிலைநிறுத்திக் கொண்டே அனைவருடனும் நட்புறவைக் பேணிக் காக்க முயல்கிறது என்றும் அவர் கூறினார்.

ஒரு சிறிய நாடான சிங்கப்பூர் சக்திவாய்ந்த எதிர் நீரோட்டங்களிலிருந்து தப்பிக்க முடியாது. எனவே, அது எதிர்காலத்தில் குழப்பமான, அபாயகரமான மற்றும் வன்முறை நிறைந்த உலகத்தை எதிர்கொள்ளத் தயாராக  வேண்டும் என்றார் அவர்.

மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவரான வோங், சிங்கப்பூர் மக்களுக்குச் சேவையாற்றுவதாக வாக்குறுதியளித்ததோடு சிங்கப்பூரை முன்னோக்கி கொண்டு வருவதற்காக தாமும் தனது குழுவினரும் தொடங்கும் புதிய பயணத்திற்கு மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் எங்கள் பாணியில் நாட்டை  வழிநடத்துவோம். தைரியமாகவும் தொலைநோக்குடனும் சிந்திப்போம். எழுதுவதற்கு இன்னும் பல பக்கங்கள் உள்ளன. சிங்கப்பூர் கதைகளின் எழுதப்படாத சிறந்த அத்தியாயங்கள் நம் முன்னால் உள்ளன என்று அவர் கூறினார்.

மூன்றாவது பிரதமர்  லீ சியென் லூங் உட்பட தனது முன்னோடிகளுக்கு பிரதமர் வோங் நன்றி கூறினார். லீ இப்போது வோங்கின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றுகிறார். சுமார் 20 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய பிறகு 72 வயதான லீ,  வோங்கிற்கு வழி விட்டு பதவி விலகினார்.


Pengarang :