SELANGOR

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 1,200 மரங்களை பராமரிக்க வெ.1.7 கோடி ஒதுக்கீடு- எம்.பி.எஸ்.ஏ. தகவல்

ஷா ஆலம், மே 16- ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளவை என
அடையாளம் காணப்பட்ட 1,200 மரங்களை அகற்றுவது அல்லது
கிளைகளை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஷா
ஆலம் மாநகர் மன்றம் 1 கோடியே 70 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளது.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பது மற்றும் பொது
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின்
அடிப்படையில் 87 குத்தகையாளர்கள் நியமிக்கப்பட்டு இதுவரை 500
மரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று டத்தோ
பண்டார் செரேமி தர்மான் கூறினார்.

மரங்களை அகற்றுவதற்கும் கிளைகளை வெட்டுவதற்கும் மாநகர் மன்றம்
1 கோடியே 70 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி
இதுவரை 500 மரங்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. இந்த பணி தொடர்ந்து
மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

மரம் விழும் ஓரிரு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. எனினும்
இதனால் சொத்துகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது. குழு காப்புறுதி
மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டுள்ளோம் என்று நேற்று இங்கு
இலவச உணவு பற்றுச்சீட்டுகளை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக வலுவான வேர்களைக் கொண்ட புதிய
வகை மரங்கள் நடப்படும் என்றும் அவர் சொன்னார்.
அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக புதிய மரம் நடப்படும்.
அவை இலைகள் குறைவாக உதிரக்கூடிய மரங்களாக இருக்கும் என்று
அவர் கூறினார்.

நிச்சயமற்ற வானிலை காரணமாக ஆங்காங்கே மரங்கள் வேறோடு சாயும்
சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இம்மாதம் 7ஆம் தேதி
கோலாலம்பூரில் மரம் விழுந்த சம்பவத்தில் வாகனமோட்டி ஒருவர்
உயிரிழந்தார்.


Pengarang :