NATIONAL

பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை 

ஷா ஆலம், மே 17- சிலாங்கூரில் பாலியல் குற்றங்களைக் கட்டுப் படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் கட்டுப் பாடுகளை அது அதிகரிக்க உள்ளதோடு சமூக நல மற்றும் அரசு சாரா அமைப்புகளுடனான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உள்ளது.

மலேசியாவில் அதிகம் பாலியல் குற்றங்கள் நிகழும் மாநிலங்களில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளதை தரவுகள் காட்டும் நிலையில் மாநில அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க விருக்கிறது.

பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கு முதல் தகவல் அளிப்பவர்களாக விளங்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அணுக்கமான தொடர்பை ஏற்படுத்துவதும் இதில் அடங்கும் என்று மகளிர் திறன் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபா சாரி கூறினார்.

உள்ளூர் சமூகங்களுடன் அதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஏதுவாக சமூக நல இலாகா மற்றும் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்படுவதை 2024ஆம் ஆண்டிற்கான இலக்காகக் கொண்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் நாட்டில் மிக அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவான மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்ற புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் சிறார் விசாரணைப் பிரிவின் (டி11) முதன்மை உதவி இயக்குநர் எஸ்ஏசி சித்தி கமிசா ஹசானின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் கூறினார்.

 கடந்த மூன்றாண்டு காலத்தில் சிலாங்கூரில்  அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவானதற்கு அதிக மக்கள் தொகை, பொருளாதார நடவடிக்கைகள், வாழ்க்கை நெருக்கடி, பரவலாக இணைய வசதி ஆகியவை காரணமாக விளங்குவதாக கமிசா தெரிவித்திருந்தார்.

கோலாலம்பூர், பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை எல்லைகளாகக் கொண்ட சிலாங்கூர், வெளியூர்வாசிகள் எளிதாக நுழைவதற்குரிய வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இங்கு குற்றச்செயல்கள் மிகுந்த காணப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பாலியல் குற்றங்கள் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை உள்ளடக்கியதாக உள்ளன. பொருளாதார நெருக்கடி மற்றும் பொருத்தமற்ற வீட்டுச் சூழல் ஆகியவை இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக விளங்குகின்றன என்றார் அவர்.


Pengarang :