ANTARABANGSA

வாகனச் சந்தையில் ஆசியானின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்தது மலேசியா

பேங்காக், மே 17-  வாகனச் சந்தையில் தாய்லாந்து நாட்டை முந்தி  ஆசியானின் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது. முதலாவது இடத்தை இந்தோனேசியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆசிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிடும் முக்கிய களமாக  இந்த பிராந்தியம் மாறி வருவதை பிரதிபலிக்கும் விதமாக இது அமைந்துள்ளது என்று ஜப்பானின் நிக்கேய் ஆசியான் இணைய பத்திரிகை கூறியது.

மேற்கண்ட மூன்று நாடுகளோடு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாமை உட்படுத்திய வாகன விற்பனை தொடர்பில் வெளியிடப்பட்ட விற்பனை தரவுகளில் தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளில் மலேசியாவின் விற்பனை தாய்லாந்தை முந்தியதைக் காட்டுவதாக அது தெரிவித்தது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை 5 விழுக்காடு அதிகரித்து 202,245ஆக ஆகியுள்ளதை மலேசியா வாகனச் சங்கத்தின் விற்பனை தரவுகள் காட்டுகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டில் வாகன விற்பனை 11 விழுக்காடு உயர்வு கண்டு 799,731 ஆக ஆனது.

அரசாங்கத்தின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்டது தேசிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான புரோட்டோன் மற்றும் பெரேடுவா நிறுவனங்களுக்கு பெரும் சாதகத்தை ஏற்படுத்தி மொத்த விற்பனைச் சந்தையில் அவ்விரு நிறுவனங்களும் 60 விழுக்காட்டு பங்கினை தக்க வைத்துக் கொண்டன என்று அந்த ஏடு குறிப்பிட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன விற்பனை 13 விழுக்காடு அதிகரித்தது. மேற்கண்ட ஐந்து நாடுகளில்  இதுவே அதிக எண்ணிக்கையாகும். கடந்தாண்டு பிற்பகுதியில் நாட்டின் பணவீக்கம் 4 விழுக்காடாக குறைந்ததை தொடர்ந்து பயனீட்டாளர்களின் வாங்கும் சக்தி அதிகரித்தது.

எனினும், தாய்லாந்தில் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தை வெகு காலமாக தக்க வைத்துக் கொண்டிருந்த இந்நாடு இவ்வாண்டு முதல் காலாண்டில் 25 விழுக்காட்டு சரிவை எதிர்நோக்கியது.


Pengarang :