சரவாக் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மை பெரிதும் துணை புரிகிறது- துணைப் பிரதமர்

சிபு, மே 19- சரவா மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை அம்மாநிலத்திற்கு அதிகளவிலான மேம்பாட்டையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

சரவாக் மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபேங் அறிமுகப்படுத்திய ஹைட்ரோஜன் தொழில்நுட்பமும் அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் இணையம் உலகம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் போதிக்கும் ஏழு தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் மையங்களை (திவேட்) கொண்ட மாநிலம் சரவா தவிர  வேறு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

சரவா மாநிலத்தை இதர மாநிலங்களுடன் ஒப்பிடுவதை எனது நோக்கம் அல்ல- மாறாக, சரவா மாநிலத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றிருக்கும் முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரியின் தலைமைத்துவத்தின் கீழ் காணப்படும் அரசியல் நிலைத்தன்மையே இந்த சாதனைக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத் துறைகளில் முன்னோக்கிச் செல்வதற்கு அரசியல் நிலைத்தன்மை மிகவும் அவசியமானது என்றும் கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.

கல்வியில் தோல்வி அடைந்த பிள்ளைகளின் படிப்பைத் தொடர்வதற்கான பெற்றோர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது தேர்வாக மட்டுமே திவேட் கல்வி உள்ளது. ஆனால், இளம் தலைமுறையினரின் முதலாவது தேர்வாக அந்த தொழில் கல்வியை அமைவதை சரவா அரசு உறுதி செய்துள்ளது என்றார் அவர்.

இதனை நாம் ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அபாங் ஜோஹாரியின் சிறப்பான தலைமைத்துவமே இந்த வளர்ச்சிக்கு காரணம் என நாம் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

சரவாக் மாநிலத்தின் புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு துறை அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் ஜாஹிட் தெரிவித்தார்.


Pengarang :