ANTARABANGSA

ஈரானிய அதிபர், அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

தெஹ்ரான், மே 20- ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்ஸி மற்றும் அரசாங்க
உயர் அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்படர் ஈரானின் வடமேற்கு
பகுதியில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த
விபத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் இன்னும்
வெளிவரவில்லை.

நேற்று, ஈரான் மற்றும் அஜர்பைஜான் எல்லையில் உள்ள நீர்த்தேக்கம்
ஒன்றை அதிபர் எப்ராஹிம் திறந்து வைத்து விட்டு திரும்பிக்
கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
வார்ஸகான் மாநிலத்தில் தரையிறங்கும் போது அந்த ஹெலிகாப்படர்
விபத்துக்குள்ளானதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனமான இர்னா
தெரிவித்தது.

இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த ஹெலிகாப்டரில் வெளியுறவு
அமைச்சர் அமிராப்டோலாஹியான், மேற்கு அஜர்பைஜான் கவர்னர்
மாலேக் ரஹ்மாதி, தாப்ரிஷ் ஹோஜதோஸ்லாம் அல் ஹசேம்
பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை தொழுகை இமாம் உள்ளிட்டோர் பயணம்
செய்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள்
அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இர்னா செய்தியாளர் கூறினார்.

பனி மூட்டம் நிறைந்த வானிலை காரணமாக அப்பகுதியை அடைவது
கடினமாக உள்ளதால் மீட்புப் பணிகளில் பெரும் இடையூறு
ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Pengarang :