ANTARABANGSA

இஸ்ரேலிய பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது ஆணை- ஐ.சி.சி. வழக்கறிஞர் விண்ணப்பம்

தி ஹேக், மே 21- போர்க் குற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ, தற்காப்பு அமைச்சர் மற்றும் மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்க கோரி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி.) வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

போர்க் குற்றங்கள் மற்றும் மனுக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்ப்பான ‘குற்றவியல் பொறுப்பு‘ அந்த ஐவருக்கும் உள்ளதை நிரூபிக்க  வலுவான ஆதாரங்கள் உள்ளதாக ஏழு மாதங்களாக நீடித்து வரும் காஸா போர் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஐ.சி.சி. வழக்கறிஞரான கரீம் கான் கூறினார்.

இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இயோவ் காலண்ட் மற்றும் நெதான்யாஹூவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்க தாம் விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் சொன்னார். கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன தரப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த பிறகு ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இவ்விரு தலைவர்களும் பொறுப்பேற்றுள்ளனர் என்றார் அவர்.

மேலும், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், ஹமாஸின் இராணுவப் பிரிவின் தளபதி முகமது அல்-மசாரி, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோருக்கு எதிராகவும் கைது ஆணை பிறப்பிக்க விண்ணப்பம் சமர்பிக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதா என்பதை விசாரணைக்கு முந்தைய நீதிபதிகள் குழு தீர்மானிக்கும். எனினும், அத்தகைய கைது ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. காஸா போர் தொடர்பான விசாரணையை அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்த்து வருகின்றன.


Pengarang :