NATIONAL

பெட்ரோல் நிலையத்தில் சமையல் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட நால்வருக்கு தலா வெ.500 அபராதம்

பெந்தோங், மே 21- கெந்திங் ஹைலண்ட்சில் உள்ள பெட்ரோல் நிலையம்
ஒன்றில் துரித மீ உணவைச் சமைத்த ஒரு ஆடவர் உள்ளிட்ட
நால்வருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 500 வெள்ளி
அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்கள் மூன்று நாட்கள்
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்
நடாராத்துன் நலிம் ஜைனான் உத்தரவிட்டார்.

தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உணவக நடத்துநரான
ஃபாட்சில் ஜில் இக்ராம் இஸ்ரான் (வயது 24), வாடிக்கையாளர் சேவை
அதிகாரி நுர்ஃபாத்தின் இர்டினா ஷாருள்நிஸாம் (வயது 24), பல் கிளினிக்
உதவியாளர் நுர் அனிஸ் அஸ்மான் (வயது 23) ஆகிய நால்வரும் ஒப்புக்
கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இம்மாதம் 12ஆம் தேதி விடியற்காலை 1.30 மணியளவில் கெந்திங்
ஹைலண்ட்ஸ், தாமான் செண்டாவானில் உள்ள பெட்ரோல் நிலையம்
ஒன்றில் எரிவாயு அடுப்பைப் பயன்படுத்தி சமையல் செய்ததாக அவர்கள்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

குற்றவியல் சட்டத்தின் 336வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 34வது
பிரிவுடன் சேர்த்து அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு கூடுதல்
பட்சம் மூன்று மாதச் சிறை அல்லது 500 வெள்ளி வரையிலான அபராதம்
அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


Pengarang :