ANTARABANGSA

அதிபரை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து- விசாரணையைத் தொடங்கியது ஈரான்

தெஹ்ரான், மே 21 – ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் அவரது குழுவினர் பலியாவதற்குக் காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஈரான் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தை விசாரிக்க உயர்மட்டக்  குழுவை ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி  நியமித்துள்ளதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் (இர்னா) தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் அலி அப்துல்லாஹி தலைமையிலான அக்குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள  வேளையில் விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி முடிந்ததும் விசாரணை முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இர்னா கூறியது.

ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜான்- ஈரானின் எல்லையில் உள்ள அணையின் திறப்பு  விழாவில் ரைஸி கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது வடமேற்கு ஈரானின் வர்சகான் என்ற இடத்தில் அவர் பயணித்த  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் பல மூத்த மாநில அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டது.


Pengarang :