NATIONAL

தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தை எதிர்கொள்ள ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீடு- நட்மா

புத்ராஜெயா, மே 24 – வரும் மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நாட்டிற்கு பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழையின் பாதிப்பை எதிர்கொள்ள  ஒரு கோடி  வெள்ளியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

பேரிடர் நடவடிக்கையின் தேவைகளுக்கு ஏற்ப தேசிய பேரிடர் உதவி அறக்கட்டளையின் கீழ் இந்த நிதியின் விநியோகத்தை தாங்கள் ஒருங்கிணைக்கவுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்தது.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க  தயாராக உள்ளன என்று அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.

அந்த  பருவ மழையின் தாக்கத்தால் சுகாதாரப் பிரச்சனைகள், நீர்ப் பற்றாக்குறை, காட்டுத் தீ,  புகை மூட்டம் மற்றும் விவசாய பொருள் உற்பத்தி குறைதல் உள்ளிட்ட பல எதிர்மறையான தாக்கங்களை நாடு எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக  துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி  கடந்த 14ஆம் தேதி கூறியிருந்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு பேரிடர் அபாயங்களைத் தணிக்க  குறைக்க அனைத்து பேரிடர் மேலாண்மை அமைப்புகளும்  உரிய ஆக்ககரமான  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.

இதற்கிடையில்,  பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுற்றுச்சூழல் துறை, சுகாதார அமைச்சகம், வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை,  கனிவள மற்றும் புவி அறிவியல் துறை உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  நட்மா கூறியது.

வீட்டு உபயோகத்திற்காக 640 கிணறுகள், சதுப்பு நிலம் மற்றும் வனப் பகுதிகளில் தீ தடுப்பு மற்றும் தீயை அணைக்கும் நடவடிக்கைக்காக 104 கிணறுகள் என மாற்று நீர் ஆதாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அவற்றில்  அடங்கும்.

தேவைப்படும் பட்சத்தில் செயற்கை மழையை பெய்விக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நட்மா தெரிவித்தது.


Pengarang :