பகுதி நேரத் தொழிலாளர்களைப் பாதுகாக்க ‘கிக்‘ ஆணையம்- ஜூலை மாதம் சட்ட மசோதா தாக்கல்-பிரதமர்

மலாக்கா, மே 25- ‘கிக்‘ ஆணையம் அமைப்பது மீதான சட்ட மசோதாவை அரசாங்கம் வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இளைஞர்கள் மத்தியில் இதற்கு முன்னர் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

அண்மையில் இளைஞர்களிடமிருந்து ஒரு கோரிக்கை கிடைத்தது. தற்காலிக அடிப்படையில் வருமானம் ஈட்ட உதவும் கிக் பொருளாதாரத் துறையில் சுமார் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது.

அரசாங்கம் உடனடியாக செயல் திட்டத்தை வரைந்ததோடு  இதன் தொடர்பில் (கிக் ஆணையம்) சட்டத்தையும் தயார் செய்துள்ளது. வரும் ஜூலை மாதம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம். இளைஞர்களின் குரல் கேட்கும் பட்சத்தில் அதனைக் கேட்பதோடு மட்டுமல்லாமல் நிறைவேற்றவும் செய்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள பண்டார் ஹிலிரில் உள்ள டத்தாரான் பாஹ்லவானில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ராவுப் அப்துல் யூசோ, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ, துணையமைச்சர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம், தொலைத் தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங், அரசாங்க  தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மக்கள் கர்வம் மற்றும் குறுகிய இனவாதப் போக்கை விட்டொழித்து ஒன்று பட்டு செயல்பட்டால் இந்த பிராந்தியத்தில் மகத்தான நாடாக மலேசியா உருவாக முடியும் எனவும் அன்வார் சொன்னார்.


Pengarang :