NATIONAL

கெ அடிலான் கட்சியின் மாநிலத் தலைவர்களாக இரு துணை அமைச்சர்கள் நியமனம்

கோலாலம்பூர், மே 27- நேற்று இங்கு நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாநில தலைமைத்துவ மன்றத்தின் தலைவர்களான இரு துணையமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் உயர்கல்வி துணையமைச்சர் டத்தோ முஸ்தாபா சக்முட் சபா மாநிலத் தலைவராகவும் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர்  பவுஸியா சலோ பகாங் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

லெடாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சைட் இப்ராஹிம் சைட் நோ ஜோகூர் மாநில கெஅடிலான் தலைவராகவும் பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கூட்டரசுப் பிரதேச தலைவராகவும் ரோலாண்ட் எங்கான் சரவா மாநிலத் தலைவராகவும் அகமது நஸ்ரி முகமது யூசுப் திரங்கானு மாநிலத் தலைவராகவும் முகமது சுப்பாராடி முகமது நோர் கிளந்தான் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநிலத் கெஅடிலான் தலைவர் பதவியையும் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் பதவியையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்று ஃபாஹ்மி சொன்னார்.

இது தவிர கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கு புதிதாக டத்தோ சங்கர் ராசாம், அஸான் இஸ்மாயில் மற்றும் டத்தோ ரோஸ்லான் ஹூசேன் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

காஸா போர் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் அந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு தலைமையேற்ற கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய விவகாரங்கள், அரசாங்கக் கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விளக்களித்ததோடு மடாணி அரசாங்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, விரைவில் நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான கட்சி தேர்தல் இயந்திரத்தின் தயார் நிலை குறித்தும் இந்த  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Pengarang :