NATIONAL

உலகில் கோடிக்கணக்கான சிறுவர்கள் இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்

லண்டன், மே 27- ஆண்டுதோறும் உலகில் 30 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இணைய பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு  ஆளாவதாக ஆய்வொன்று கூறுகிறது.

இன்று வெளியிடப்பட்ட அந்த நெருக்கடியின் அளவீடு தொடர்பான  உலகளாவிய மதிப்பீட்டின் படி உலகிலுள்ள சிறார்களில் எண்மரில் ஒருவர் (12.6 விழுக்காட்டிற்கு இணையானது) ஒப்புதல் இன்றி பாலியல் படங்களை எடுப்பது, பகிர்வது மற்றும் வெளிப்படுத்துவது போன்ற செயல்களுக்கு இலக்காகின்றனர். இது இளையோரின் மக்கள் தொகையில் 30 கோடியே 20 லட்சம் பேரை பிரதிபலிக்கிறது.

மேலும், உலகளவில் 12.5 விழுக்காட்டு சிறுவர்கள் தேவையற்ற  பாலியல் உரையாடல் போன்ற இணைய கோரிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. இவற்றில் பாலியல் தொடர்பான கேள்விகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் தேவையற்ற பாலியல் செயல்களும் அடங்கும்.

இது பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றவடிவிலும் விரிவடைகிறது. இத்தகைய காமுகர்கள் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

உலகம் முழுவதும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தாலும் குறிப்பாக அமெரிக்கா இத்தகைய குற்றத் தாக்கம் அதிகம் கொண்ட நாடாக கருதப்படுகிறது. சிறார்களுக்கு எதிரான இணைய குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ஒன்பது அமெரிக்கர்களில் ஒருவர் (1 கோடியே 40 லட்சம் பேர்) ஒப்புக் கொண்டுள்ளனர்.

எழு விழுக்காட்டு பிரிட்டிஷ் ஆண்களும் (18 லட்சம் பேர்) 7.5 விழுக்காட்டு ஆஸ்திரேலியர்களும் இத்தகைய குற்றங்களைப் புரிந்துள்ளதை ஒப்புக் கொண்டதாக எடின்பெர்க் பல்கலைக்கழகத்தின் சைட்லைட் முன்னெடுப்பின் வழி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


Pengarang :