BERITA GLOBAL

ராஃபா முகாம் மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் 45 பேர் பலி- உலக நாடுகள் கொந்தளிப்பு

கெய்ரோ/ஜெருசலம், மே 28- இஸ்ரேலிய படைகள் நடத்திய வான் தாக்குதலில் காஸா நகரான ராஃபாவில் உள்ள கூடாரத்தில் செயல்பட்டு வந்த அகதிகள் முகாம் தீப்பற்றியதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோரத் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு போரை நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்தும் அனைத்துலக நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் படி பன்னாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் அந்த கூடாரம் தீக்கிரையான நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ராஃபாவிலுள்ள ஹமாஸ் தளபதிகளுக்கு எதிராக தாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணு வம் கூறியது.

ராஃபாவின் கிழக்கே கடந்த இரு வாரங்களாக தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் இந்த முகாமில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இரவில் தாங்கள் உறங்கத் தயாரான வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் கூறினார். நாங்கள் தொழுகையை முடித்துக் கொண்டு பிள்ளைகளுடன் படுக்கச் சென்றோம். வழக்கத்திற்கு மாறாக எதுவும் தென்படவில்லை. திடீரென பலத்தச் சத்தம் கேட்டது. அடுத்த கணம் தீ எங்களைச் சூழ்ந்து கொண்டது என்று உம் முகமது அல்-அத்தார் என்ற பாலஸ்தீன தாய் கூறினார்.

இரவு வேளையில் தீ கொளுந்து விட்டு எரிவதையும் மக்களின் அலறல் சத்தம் கேட்பதையும் சித்தரிக்கும் காணொளி ஒன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அங்கு சிதறிக்கிடந்த  தகரங்களை அப்புறப்படுத்தவும் அங்கு இருந்த ஒரே தீயணைப்பு வண்டியைக் கொண்டு தீயை அணைக்கவும் இளைஞர்கள் முயல்வதை காண முடிந்தது.

இதனிடையே, சிவிலியன்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி இஸ்ரேலை அமெரிக்கா அறிவுறுத்தியது. எனினும், ராஃபா மீதான தாக்குதலை நிறுத்தும்படி அது இஸ்ரேலுக்கு உத்தரவிடவில்லை.


Pengarang :