BERITA GLOBAL

பாகிஸ்தானில் வெப்ப நிலை 52 டிகிரி செல்சியஸைத் தாண்டியது

மொஹிஞ்ச டாரோ, மே 28- பாகிஸ்தானின் தென் மாநிலமான சிந்துவில் வெப்ப நிலை 52 டிகிரி செல்சியஸை தாண்டியது. தற்போது நிலவி வரும் கோடை கால வெப்ப அலைக்கு மத்தியில் அந்நாட்டில் இதற்கு முன் பதிவான அதிகப்பட்ச வெப்ப நிலையை எட்டி விடும் அளவுக்கு தற்போதைய வானிலை உள்ளது.

மனிதத் தவறுகளால் ஏற்பட்டதாக இருக்குமென கருதப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக அதீத வெப்ப நிலையை ஆசிய நாடுகள் அண்மைய சில மாதங்களாக எதிர்நோக்கி வருகின்றன என்று அனைத்துலக அறிவியலாளர்கள் குழு கூறியது.

கி.மு. 2500 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தைய தொல்பொருள் தளங்களுக்குப் பெயர் பெற்ற சிந்து மாநிலத்தின் மொஹிஞ்ச டாரோவில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப நிலை 52.2 டிகிரியை எட்டியதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறையின் உயர் அதிகாரியான ஹாஷிட் அப்பாஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வழக்கமாக கோடை காலத்தில் பதிவாகும் வெப்பநிலையை விட இது அதிகமானதாகும். இந்நகரத்திலும் நாட்டிலும் இதற்கு முன் 53.5 மற்றும் 54 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பமான கோடை காலத்தையும் மிதமான குளிர் காலத்தையும் குறைவான மழைப் பொழிவையும் பதிவு செய்யும் சிறிய நகரமாக மொஹிஞ்ச டாரோ விளங்குகிறது. பேக்கரிகள், நேநீர் கடைகள், இயந்திர, மின்னியல் சாதனங்கள் பழுதுபார்ப்பு மையங்கள், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனைக் கடைகள் என இந்நகரம் பொதுவாக பரபரப்பாக காணப்படும்.

எனினும்,  தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக இக்கடைகள் வாடிக்கையாரின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.  பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.


Pengarang :