ANTARABANGSA

லோரியுடன் விரைவு பேருந்து மோதல்- ஒருவர் காயம், 37 பயணிகள் உயிர் தப்பினர்

குவாந்தான், மே 28- கிழக்கு கரை நெடுஞ்சாலை 1இல் இன்று அதிகாலை நிகழ்ந்த லோரி மற்றும் விரைவு  பேருந்து சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்த வேளையில் 37 பயணிகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

நாற்பது வயது ஓட்டுநர் செலுத்திய அந்த பேருந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாயிலிருந்து திரங்கானு மாநிலத்தின் கோல திரங்கானுவுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் பூசு கூறினார்.

இந்த விபத்து விடியற்காலை 1.00 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துணிகள் ஏற்றிச் சென்ற லோரியின் பின்புறம் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

இந்த விபத்தில் கை,கால் மற்றும் தலையில் காயங்களுக்குள்ளான பேருந்து ஓட்டுநர் சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

விரைவு  பேருந்தின் மற்றொரு ஓட்டுநரான 36 வயது நபர், லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு இந்த விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றார் அவர்.

இந்த பேருந்தில் பயணம் செய்த அனைத்து 37 பயணிகளும் காயமின்றித் தப்பினர். அவர்கள் மாற்று பேருந்து மூலம் கோல திரங்கானுவுக்கு பயணத்தைத் தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 43(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :