SELANGOR

கிள்ளான் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு அஃப்பின் குழுமம் வெ.500,000 நிதியுதவி

கிள்ளான், மே 28- கிள்ளான் ஆற்றை இண்டர்செப்டர் 002 இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு உதவும் வகையில் அஃப்பின் பேங்க் பெர்ஹாட் குழுமத்திடமிருந்து 500,000 வெள்ளியை லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனம் பெற்றுள்ளது.

ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் இந்த ஏற்பாட்டு ஆதரவுத் திட்டத்தின் வாயிலாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் துணை நிறுவனமான லண்டாசான் லுமாயான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு  கிட்டும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கிள்ளான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் சவால்மிக்க பணியை மேற்கொள்வதில் ஒத்துழைப்பு நல்க முன்வந்த அஃப்பின் குழுமத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஒத்துழைப்பின் வாயிலாக கிள்ளான் ஆற்றைச் சுத்தம் செய்யும் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள இயலும் என அவர் சொன்னார்.

லண்டாசான் லுமாயான் நிறுவனத்திற்கு அஃப்பின் நிறுவனம் ஏற்பாட்டு ஆதரவை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் அஃப்பின் பேங்க் பெர்ஹாட் குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ வான் ராஸ்லி அப்துல்லா மற்றும் லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் ஷியாபுல் அஸ்மான் நோர்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு கிள்ளான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இண்டர்செப்டர் 002 இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

கிள்ளான் ஆற்றில் நீரின் தரத்தை ஐந்தாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு கொண்டு வரும் சிலாங்கூர் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கடப்பாட்டை தாங்கள் கொண்டுள்ளதாக வான் ராஸ்லி தெரிவித்தார்.

கிள்ளான் ஆற்றில் நீரில் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு மாநில அரசுக்கு உதவும் நோக்கில் 500,000 வெள்ளி நிதியை வழங்க நாங்கள் முன் வந்துள்ளோம் என்றார் அவர்.


Pengarang :