NATIONAL

இவ்வாண்டின் 20வது வாரத்தில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு- இருவர் மரணம்

புத்ராஜெயா, மே 28 –  இவ்வாண்டு மே 12 முதல் மே 18 வரையிலான 20வது நோய்த் தொற்று  வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 2,461 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,338 ஆகப் பதிவாகியிருந்தது.

டிங்கிக் காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இரு இறப்புகளும் இக்காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

கடந்த 20 வது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக் கட்டத்தில் பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 59,681 ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இந்த எண்ணிக்கை 43,619 ஆக இருந்தது. டிங்கி காய்ச்சல் தொடர்புடைய  42 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில்  பதிவான மரண எண்ணிக்கை 28 ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

20வது வாரத்தில்  பதிவான நோய் பரவல் அதிகம் உள்ள இடங்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்த  வேளையில் அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை  59 ஆக இருந்தது.

சிலாங்கூரில் 44 இடங்கள்  கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சரவாக்கில் தலா நான்கு இடங்கள், கெடாவில் மூன்று இடங்கள்,  பேராக்கில் இரண்டு இடங்கள், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒரு இடம் ஆகியவை  நோய்ப் பரவல் அதிகம் உள்ளவையாக அடையாளம் காணப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

இதற்கிடையில்,  20வது நோய்த் தொற்று வாரத்தில் ஒரு சிக்குன்குனியா சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இன்று வரை இச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உள்ளது என்றார் அவர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் டிங்கி காய்ச்சல் சம்பவங்களைத் தடுக்க பள்ளி கட்டிடங்களுக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பது, தண்ணீர் தேங்கும் பாத்திரங்கள் அல்லது குப்பைகளை அப்புறப் படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிகள் மற்றும் அவற்றை பராமரிக்க நியமிக்கப்பட்ட துப்புரவு குத்தகையாளர்களை அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :