ANTARABANGSA

ஊஞ்சலில் படுத்திருந்த கிரேன் ஓட்டுநர் மின்னல் தாக்கி மரணம்

சுங்கை பட்டாணி, மே 29- கடுமையான மழையின் போது வீட்டின் எதிரே இருந்த ஓய்வுக் குடிலிலின் ஊஞ்சலில் படுத்திருந்த 31 வயது ஆடவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் இங்குள்ள சுங்கை லாயார், கம்போங் பாரு பூலாவ் தீகாவில் நேற்றிரவு நிகழ்ந்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸாருடின் வான் இஸ்மாயில் கூறினார்.

கிரேன் ஓட்டுநரான ஷாஹ்ரிம் சே அலி என்ற அந்த ஆடவர் அந்த குடிலில் உள்ள ஊஞ்சலில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

நேற்றிரவு சுமார் 9.45 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுப்படுகிறது. தன் கணவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை அந்த ஆடவரின் 31 வயது மனைவி இரவு 10.00 மணியளவில் கண்டுள்ளார் என்று அவர்  தெரிவித்தார்.

ஷாஹ்ரிம் உறங்கிக் கொண்டிருக்கிறார் என நினைத்து அவரின் மனைவியும் மற்றவர்களும் அவரை தொந்தரவு செய்யாமல் விட்டுள்ளனர்.  எனினும், இரவு 10.00 மணியளவில்  மனைவி அவரை எழுப்ப முயன்ற போது அசைவற்ற நிலையில் ஷாஹ்ரிம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சாஹ்ரினின் குடும்பத்தினர் அவரை உடனடியாக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், வரும் வழியில் அவரின் உயிர் பிரிந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றார் அவர்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பேது ஊஞ்சலை தாங்கி நிற்கும் மரக்கட்டையில் தீப்பொறி பட்டதற்கான அறிகுறி தென்பட்டதோடு மின் கம்பியும் துண்டிக்கப்பட்டிருந்தது. மின்னல் தாக்கியதற்கான அறிகுறியாக அவரது உடலில் தீக்காயங்கள் காணப்பட்டன. ஆகவே அவ்வாடவரின் மரணத்தில் சூது நிகழ்ந்ததற்கான தடயங்கள் தென்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :