NATIONAL

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரு வகை மசாலைப் பொருளின் விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை

புத்ராஜெயா, மே 29- எல்தினா ஆக்ஸிடா அடங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வகை இந்திய மசாலைப் பொருள்களான எவெரஸ்ட் பிஷ் கறி மற்றும் எம்.டி.எச். கறி பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

அவ்விரு மசாலைப் பொருள்களையும் கையிருப்பில் வைத்திருக்கும் இணையம் வழி விற்பனை செய்வோர் உள்பட அனைத்து வணிகர்களும் தங்கள் விற்பனையை நிறுத்த வேண்டும் என்பதோடு அந்த சமையல் பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை மின்-வர்த்தகத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதையும் நிறுத்த வேண்டும் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டது.

இந்த எல்தினா ஆக்ஸிடா பெரும்பாலும் பூச்சிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. பாக்ரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மசாலைப் பொருள்களிலும் இது சேர்க்கப்படுகிறது.  ஆக்கத்தன்மையை அதிகரிப்பதற்காக தூய்மைப் பொருள்களிலும்  இது சேர்க்கப்படுகிறது.

புற்றுநோயை உருவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால் உணவு மற்றும் உணவுடன் தொடர்புடையப் பொருள்களிலும் இந்த பொருளின் பயன்பாடு அனுமதிக்கப்படாது என்று அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை எவரெஸ்ட் பிஷ் கறி மசாலை ஒரு முறை மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதை மலேசிய உணவு பாதுகாப்பு தகவல் முறையின் தரவுகள் காட்டுவதாக அது கூறியது.

எனினும், எம்.டி.எச். கறி பவுடர் மலேசியாவில் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பில் எந்த தரவுகளும் காணப்படவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள நுழைவாயில்களில் சோதனை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை சுகாதார அமைச்ச தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அது தெரிவித்தது


Pengarang :